சிகரம்

 சிகரம் - ஆசிரியர் பக்கம் - 01

பதிவர் : சிகரம் பாரதி on 2017-07-01 00:47:27

வணக்கம் நண்பர்களே! "சிகரம்" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்!

எமது நீண்டகால இலக்காக இருந்த "சிகரம்" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். "சிகரம்" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.

இன்றைய நவீன உலகில் மொழிகள் நிலைத்திருப்பிற்காக கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் மொழி பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஆகவே நாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் தேவையாகிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே தனித்தனி தீவுகள் போல எடுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்தால் தான் உறுதியான, நிலையான வளர்ச்சியை அடைய முடியும். அந்தப் பணியை சிகரம் செய்யப் போகிறது. மேலும் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் நாம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் நமது பணிக்கூற்றை கவனித்தால் புரிந்துகொள்ள முடியும்.

எமது மகுட வாசகமாக "தமிழ் கூறும் நல்லுலகு" என்னும் கூற்றைத் தெரிவு செய்திருப்பதுடன் எமது தூர நோக்காக "தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்" என்னும் கூற்றை தெரிவு செய்துள்ளோம்.

தற்போது இணைய ஊடகமே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே இணைய வெளியில் நமது இருப்பை நாம் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை தனி ஒருவனாக யாராலும் செய்ய முடியாது. அவரவர் சக்திக்கேற்ப சிறிய பங்களிப்பை வழங்கலாம். ஆனால் ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆகவே நம் மூச்சிலும் பேச்சிலும் உயிரெனக் கலந்துள்ள தமிழ் மொழியை உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களிடையே கொண்டு சென்று சேர்ப்போம் வாருங்கள்!

- சிகரம் பாரதி.
குறிச்சொற்கள்: #வணக்கம் நண்பர்களே!
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

முனீஸ்வரன்

2017-07-02 04:54:08

சிறக்கட்டும் உமது பணி.

Create AccountLog In Your Account