சிகரம்

தமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை!

பதிவர் : சிகரம் on 2018-02-12 01:32:16

கூகிள் தற்போது தமிழ் மொழிக்கான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் தமிழ் மொழியிலான தேடல், தமிழ்த் தட்டச்சு, பிளாக்கர் தமிழ், தமிழ் மொழிபெயர்ப்பு என தொடர்ச்சியாக தமிழுக்கான சேவைகளை வழங்கி வந்தது. அண்மையில் குரல் வழி தமிழ்த் தட்டச்சு சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது மிக நீண்ட காலமாக பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆட்சென்ஸ் விளம்பர சேவையை தமிழிலும் வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து கூகிள் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:


"மில்லியன் கணக்கான இந்திய மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழியை கூகிள் ஆட்சென்ஸ் சேவையை ஆதரிக்கும் மொழிகளின் பட்டியலில் இணைத்துள்ளோம். இதன்மூலம் வியாபார நிறுவனங்கள் தமிழ் பேசும் வாடிக்கையாளர்களோடு கைகோர்க்கவும் தமிழ் பேசும் இணையத்தளங்கள் விளம்பர வருவாயைப் பெற்றுக்கொள்ளவும் வழிசமைக்கப்பட்டுள்ளது."


கூகிள் ஆட்சென்ஸ் குறிப்பிடுவது போல இந்திய மக்களால் மட்டுமே தமிழ் மொழி பேசப்படவில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களால் தமிழ் மொழி பேசப்பட்டு வருகிறது. ஆகவே இக்கூற்றை கூகிள் திருத்திக்கொள்ள வேண்டும்.
கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை தமிழ் பேசும் உங்கள் இணையத்தளங்களிலும் இணைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:


01. கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை உங்கள் இணையத்தளம் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.


02. கூகிள் ஆட்சென்ஸ் கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்ளுங்கள்.


03. கூகிள் ஆட்சென்ஸ் இனை உங்கள் இணையத்தளத்தில் நிறுவுவதற்கான குறியீட்டைப் பெற்று அதனை உங்கள் தளத்தில் இணைத்து விடுங்கள்.


இப்போது நீங்களும் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையின் வாடிக்கையாளராக மாறி பணம் சம்பாதிக்க முடியும்.


கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை உபயோகிக்கும் போது அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை நீங்கள் முறையாக தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருவது அவசியமாகும்.


கூகிள் ஆட்சென்ஸ் சேவை உங்கள் தளத்தில் இயங்குமானால் நீங்களே விளம்பரங்களை சொடுக்கக் கூடாது. விளம்பரங்களை சொடுக்குமாறு வாசகர்களை அறிவுறுத்தக் கூடாது. மேலும் இவை உட்பட எந்தவொரு செயற்கையான முறையிலும் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையின் கொள்கைகளையும் விதிமுறைகளையும் மீறினால் உங்களுக்கான விளம்பர சேவை துண்டிக்கப்படும்.


தமிழ் வலைப்பதிவு மற்றும் இணையத்தள உரிமையாளர்களே, கூகிள் வழங்கியுள்ள இந்த அற்புதமான வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துகிறோம்!

 

தமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை! - by Google      


தமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை! - சிகரம்

 

-சிகரம்

 

#சிகரம் #சிகரம்தொழிநுட்பம் #SIGARAM #SIGARAMCO #SIGARAMTECH #GOOGLE #GoogleAdsense 

 

குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்தொழிநுட்பம் #SIGARAM #SIGARAMCO #SIGARAMTECH #GOOGLE #GoogleAdsense
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account