சிகரம்

இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி

பதிவர் : சிகரம் on 2018-02-11 21:41:13

இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்று முடிந்துவிட்டது. பல்வேறு இழுபறிகள், கால தாமதங்கள் மற்றும் விவாதங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருந்த தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. ஓரிரு சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் அனைத்திலங்கை ரீதியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடாத்தப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் இடம்பெற்றுள்ளது.


இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அணியான தாமரை மொட்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய பிரதமர் ரணிலின் யானை இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. நல்லாட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிலை மூன்றாமிடத்தையே பெற்றுக் கொண்டுள்ளது.


இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகவியலாளர் ஏ.ஆர்.வி லோஷன் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்:


"இந்த உள்ளூராட்சித் தோல்விகளை வைத்து ஒரேயடியாக தலைமைகளின் செல்வாக்கு சரிவு பற்றியும், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் வியாக்கியானம் செய்பவர்களுக்கு...

(நாட்டின் எத்திசைக்கும் இது பொருந்தும்)
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பதனால் பிரதேச, ஊர் அபிவிருத்தியும் சம்பந்தப்பட்டது - உள்ளூர் செல்வாக்கு பெற்றோரை அடையாளம் காண்பதிலும், அந்தந்தப் பிரதேசத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட சரியாகச் செயற்பட்ட கட்சிகளுக்கு வெற்றி கைவரப்பெற்றுள்ளது.

இதனால் தான் பல இடங்களில் சுயேட்சைகள் அபாரமான வெற்றியைத் தம் வசப்படுத்தியுள்ளார்கள்.


இங்கே கிடைத்த வாக்குகளை மட்டும் வைத்து மாற்றம், ஏற்றம் , எழுச்சி என்று கணக்குப் போடாதீர்கள்.

இங்கே காட்டப்பட்டவை முற்றிலும் சரியான உணர்வுகளாக இராது.


ஆனாலும் சிற்சில உணர்வுகளின் பிரதிபலிப்புக்களை பாடங்களாக எடுத்து அத்திவாரங்களை இப்போதே பலப்படுத்துவது 2020க்கு உதவும்."


இக்கூற்றின் பிரகாரம் அண்மைக்காலமாக கூட்டு அரசாங்கத்தில் நிகழ்ந்து வரும் இழுபறிகள், குழப்பங்கள் மற்றும் முறுகல் நிலைகள் இந்தத் தேர்தலில் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் முற்றிலும் தேர்தல் முடிவுகளை அவை தீர்மானித்து விடவில்லை. இம்முறை புதிய கலப்பு முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆதலால் வட்டார முறைமை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. ஆகவே அந்தந்த வட்டாரங்களில் மக்கள் ஆதரவைப் பெற்றவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மக்கள் கட்சியைப் பார்த்து வேட்பாளர்களைக் கருத்திற் கொள்ளவில்லை. மாறாக தமது வட்டார வேட்பாளர் எந்தக் கட்சியோ அதற்குப் புள்ளடி இட்டிருக்கிறார்கள்.


மக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களின் கட்சிகள் முன்னிலை பெற்றிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகள் செயற்படத் துவங்கிய பின் சிறிது காலத்தில் கட்சி மாற்றங்கள் இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். புதியவர்கள் களத்திற்கு வந்திருக்கிறார்கள். பெண்களும் சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர்.


வட்டார முறைமை பிரதேச அபிவிருத்தியை மேலும் இலகுவாக்கியுள்ளது. மக்களுக்கு தாம் அறிந்த ஒருவரே வட்டாரத்திற்குப் பொறுப்பானவராக இருப்பதால் பிரதேச ரீதியான அபிவிருத்தியை இலகுவாக முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. புதிய அரசியல்வாதிகள் ஊழலற்ற அரசியலை மேற்கொண்டு மக்களின் இதயங்களை வென்றெடுத்து புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டும். செய்வார்களா?

 

#சிகரம் #தேர்தல் #உள்ளூராட்சிதேர்தல்2018 #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #LGpollSL #LGpollSL2018

 

இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2018 சொல்லும் செய்தி - சிகரம் 


குறிச்சொற்கள்: #சிகரம் #தேர்தல் #உள்ளூராட்சிதேர்தல்2018 #SIGARAM #SIGARAMCO #SIGARAMNEWS #LGpollSL #LGpollSL2018
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account