பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

பதிவர் : சிகரம் பாரதி on 2017-07-23 20:24:49

சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன.

பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். "சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்." என்று தான் வாழும் சென்னையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னுடைய வசீகரமான எழுத்துக்களால் வாசகர்களைக் கவர்வதில் வல்லவர்.
"எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும்" என்று கதை ஆரம்பிக்கும் போதே மனதுக்குள் ஒரு சோகம் வந்து உட்கார்ந்து விடுகிறது. தொடர்ந்து கடலில் கரைப்பதற்காக எலும்புகளை பொறுக்கியெடுக்கச் சொல்கிறார் வெட்டியான்.

"நான் இடது கையைப் பாலில் நனைத்துக்கொண்டேன். மண் சட்டியில் கை வைத்தேன். எலும்புகள். அனைத்துமே விரலளவு நீளத்தில்தான் இருந்தன. எடுத்துச் சென்று கடலில் சேர்க்கத் தோதாக உடைத்திருப்பார்களாயிருக்கும். அப்பா வலியற்ற வெளியில் இருந்து பார்த்திருப்பாரா? உடைக்காதே அது என் எலும்பு என்று மௌனமாகச் சொல்லியிருப்பாரா?......... நான் சட்டிக்குள் கையைவிட்டுத் துழாவிப் பார்த்தேன். எது அப்பாவின் விரல் எலும்பாயிருக்கும்? எது கழுத்தெலும்பாயிருக்கும்? வருடக்கணக்கில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருந்த மனிதரின் நெஞ்செலும்பு, தோலைத் தாண்டித் தெரிய ஆரம்பித்திருந்ததை நினைத்துக்கொண்டேன்......." என்றெல்லாம் நீளும் வரிகள் ஏதோ ஒரு வலியை இதயத்தில் உருவாக்கிச் செல்கின்றன.

கதையின் ஒவ்வொரு வரிகளும் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த மறக்கவில்லை.

"எலும்பு உடைந்து கட்டுப்போட்ட என் காலை அவரது கரம் தன்னியல்பாக வருடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். கட்டின் கனத்தால் அப்போது ஸ்பரிசம் உணரமுடியவில்லை. இப்போது அது வலித்தது. மயானத்து வேலையாள் துண்டுகளாக உடைத்தபோது அவருக்கு வலித்திருக்குமா?..."

"வாழ்நாளில் அப்பா எனக்கு அளித்த ஒரே அறிவுரை அதுதான். என்ன ஆனாலும் மனைவியைக் கைநீட்டாதே......"

"கடல் காற்று மிகவும் சூடாக இருந்தது. கையில் அப்பாவும் சூடாகத்தான் இருந்தார். இயல்பாகவே அவருக்கு சூட்டு உடம்பு. கொதிக்கக் கொதிக்க காப்பி குடிப்பார். கை பொறுக்க முடியாத கடும் சுடுநீரில்தான் குளிப்பார். எப்படித்தான் அந்தச் சூட்டைப் பொறுக்கிறாரோ என்று எப்போதும் தோன்றும். ....."

"உறங்குவது போலத்தான் இல்லாமல் போயிருந்தார்." என்னும் இறுதி வரி உணர்வுகளையெல்லாம் ஏதோ செய்து கண்ணீரை வரவழைத்துச் சென்றுவிட்டது. நீங்களும் இச்சிறுகதையை கட்டாயம் பாராவின் வலைத்தளத்தில் வாசித்துப் பாருங்கள், உங்களுக்காக இல்லாவிட்டாலும் அப்பாவுக்காக....

பாராவின் இணையத்தளம் : பாரா

சிறுகதை : ஒரே ஒரு அறிவுரை
குறிச்சொற்கள்: #பாரா
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account