சிகரம்

இந்தியா எதிர் மே.இ. தீவுகள் | 2வது ஒரு நாள் | சமநிலை முடிவு

பதிவர் : சிகரம் on 2018-10-25 13:27:48

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறுகிறது. இதன் இரண்டாவது போட்டி நேற்று (24.10.2018) விசாகப்பட்டினத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்றது. 


இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா 4, ஷிக்கர் தவான் 29 என ஆட்டமிழக்க தடுமாறியது இந்திய அணி. விராட் கோலி அம்பதி ராயுடு ஜோடி சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. 


ராயுடு 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த தோனி 20 ஓட்டங்களை மட்டும் பெற்று ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால் தோனி முன்னால் இறங்கி வந்து விளாசிய ஆறு ஓட்டங்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. தொடர்ந்து ரிஷப் பண்ட் 17 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 13 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றனர். 
இந்தியாவின் ஓட்ட இயந்திரம் (Run Machine) மற்றும் King Kohli என அழைக்கப்படும் விராட் கோலி 129 பந்துகளில் 157 ஓட்டங்களை விளாசினார். 13 நான்கு ஓட்டங்களையும் 4 ஆறு ஓட்டங்களையும் அவர் பெற்றிருந்தார். அதே நேரம் அவர் 81 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஒரு நாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த 13வது சர்வதேச வீரராகவும் 5வது இந்திய வீரராகவும் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார். 


அத்துடன் 10,000 ஓட்டங்களை விரைவாக பெற்றவரின் பட்டியலில் முதலிடத்தையும் கோலி கைப்பற்றிக்கொண்டார். விராட் கோலி 205 இன்னிங்ஸ்களில் 10,000 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள Master Blaster சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் இந்த ஓட்ட இலக்கை எட்டியுள்ளார். 


அது மட்டுமல்லாது 2018ஆம் ஆண்டில் 1000 ஓட்டங்களையும் விராட் கோலி கடந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் 1000 ஓட்டங்களைக் கடந்தவர்கள் பட்டியலிலும் விராட் கோலியே முதலிடத்தில் உள்ளார். இவ்வாறாக சாதனை மேல் சாதனையுடன் விராட் கோலி அதிரடியாக ஆட ஒரு கட்டத்தில் தடுமாறிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைக் குவித்தது. 


மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பாக ஆஷ்லே நர்ஸ் மற்றும் ஓபேத் மெக்கோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பம் முதலே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியது. 


ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரின் அதிரடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி போட்டியை சமநிலைப்படுத்தியது. ஷிம்ரன் ஹெட்மயர் 64 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் 7 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார். இறுதிவரை நின்று போராடிய ஷாய் ஹோப் 134 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைக் குவித்தார். 


ஷாய் ஹோப் இறுதிப் பந்தில் பெற்றுக்கொடுத்த நான்கு ஓட்டம் மூலமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியின் சார்பாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக்கொண்டார். 


போட்டியின் ஆட்ட நாயகனாக அதிவேக பத்தாயிரம் ஓட்டங்களை அடித்து சாதனை புரிந்த விராட் கோலி தேர்வானார். 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்னும் கணக்கில் முன்னிலையில் உள்ளது. புனே, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் எஞ்சியுள்ள மூன்று ஒரு நாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. 

குறிச்சொற்கள்: #INDvsWI #INDvWI #India #WestIndies #Windies #BCCI #CWI #ICC #ODI #TamilCricket #CricketScores #SportsNews #Virat #ViratKohli #Legend #KingKohli #10KforVK #Kohli #Virat10k #TeamIndia #10000forKohli #S
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account