சிகரம்

இந்தியா எதிர் மே.இ. தீவுகள் | 1வது ஒரு நாள் | இந்தியா அதிரடி வெற்றி

பதிவர் : சிகரம் on 2018-10-22 00:31:48

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை அடித்து துவம்சம் செய்திருக்கிறது. மிகச் சவாலான ஓட்ட எண்ணிக்கையை காப்பாற்ற முடியாமல் விழி பிதுங்கி நின்றனர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள். 


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஒரு பக்கம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட்டுகளை வாரியிறைத்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஓட்டங்களை மலைபோல் குவித்துக் கொண்டிருந்தது. 
போட்டியின் முதல் பந்தில் நான்கு ஓட்டங்களைத் தெறிக்க விட்டதில் இருந்தே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வாணவேடிக்கை ஆரம்பமாகியிருந்தது. ஆரம்பம் முதலே ஓட்ட விகிதம் 6க்குக் குறையவேயில்லை. கிரன் பவுலின் 51, ஷிம்ரன் ஹெட்மயரின் 106 என ஒவ்வொருவரும் அதிரடி காட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் அணி குவித்தது. 


இந்திய அணி சார்பாக மொஹமட் ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சஹல் குறைவான ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டார். மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒன்பது 6 ஓட்டங்களையும் முப்பது 4 ஓட்டங்களையும் விளாசியிருந்தது. 


ஷிக்கர் தவான் ஆரம்பத்திலேயே சொதப்பினார். ஆனாலும் ரோஹித்தும் கோலியும் இரட்டைச்சத இணைப்பாட்டத்தின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வலுவான வெற்றியிலக்கைத் தகர்த்தெறிந்தனர். விராட் கோலி 140 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ரோஹித் ஷர்மா 152 ஓட்டங்களை பெற்று வெற்றியைத் தேடித் தந்தார். 


மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பாக தோமஸ் 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 323 என்னும் வலுவான வெற்றியிலக்கை இந்திய அணி 42.1 ஓவர்களில் அடித்துத் துவைத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 ஓட்டங்களுடன் ஆரம்பித்த போட்டியை இந்திய அணி 6 ஓட்டங்களுடன் முடித்து வைத்தது. 


இந்திய அணி சார்பாக பதினோரு ஆறு ஓட்டங்களும் முப்பத்து எட்டு 4 ஓட்டங்களும் விளாசப்பட்டிருந்தன. இதில் அதிக ஓட்டங்களை விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 36,000 பார்வையாளர்களுக்கு மத்தியில் கவுகாத்தியில் வான வேடிக்கை நிகழ்த்திய இந்திய அணி 24ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும் தொடருமா? பார்க்கலாம்!!!

குறிச்சொற்கள்: #INDvsWI #INDvWI #India #WestIndies #Windies #BCCI #CWI #ICC #ODI #TamilCricket #CricketScores #SportsNews #Virat #MSD #Chahal #IPL #StarSports #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account