சிகரம்

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

பதிவர் : சிகரம் on 2018-10-13 23:52:11

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று துவங்கவுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 311 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாகவே 100 ஓவர்களைக் கூட விளையாடியிருக்கவில்லை. ஆனால் இந்த இரண்டாம் போட்டியில் 102 ஓவர்களை முதலாம் இன்னிங்ஸ்க்காக மட்டும் அந்த அணி விளையாடியிருக்கிறது. 

ஆகவே பந்துகளை பொறுமையாகக் கையாளப் பழகியிருக்கிறார்கள் அல்லது முயற்சித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் இந்திய அணியின் அளவுக்கு அவர்களால் ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு நாளைக்கும் மேலாக 102 ஓவர்களில் பெற்ற ஓட்ட இலக்கை இந்திய அணி ஒரே நாளில் அதுவும் 81 ஓவர்களில் அடைந்திருக்கிறது. அது அணியின் ஸ்திரத் தன்மைக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிடலாம். 

இந்திய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. ரஹானே 75 ஓட்டங்களுடனும் பண்ட் 85 ஓட்டங்களுடனும் சதத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். இவர்கள் இருவருக்கிடையில் மட்டும் நூறு ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் களத்தில் நின்றாலே 500 ஓட்டங்களுக்கு மேல் குவிக்க முடியும். இந்திய அணி கடந்த போட்டியைப் போல இந்த போட்டியிலும் 700 ஓட்டங்களைக் குவிக்குமானால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வழமை போல இனிங்கஸ் இனால் வெற்றி கொள்ள முடியும். 

லோகேஷ் ராகுல் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார். இந்திய அணி இறுதியாக இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை இழந்துள்ளதால் எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை எப்படியேனும் வெல்ல வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறது. அறிமுக வீரர் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி வருகிறார். 

ஆகவே அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஷிக்கர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் இருவரையும் தவிர்த்துவிட்டு முரளி விஜய் மற்றும் பிரித்வி ஷா ஜோடியை ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக தெரிவு செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணி இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுமானால் லோகேஷ் ராகுல் தனது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். 

ஆனால் அதற்கான வாய்ப்புகளும் குறைவு. ரஹானே மற்றும் பண்ட் ஜோடி அருமையாக விளையாடி வருகிறது. தொடர்ந்து ஜடேஜா இருக்கிறார். அவர் கடந்த போட்டியில் தனது கன்னி சதத்தினைப் பூர்த்தி செய்திருந்தார். இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பாரா? பார்க்கலாம். 

எது எப்படியிருந்தாலும் இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி நிர்வாகம் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் அணியை தேர்வு செய்துவிடும். உள்ளே யார் வெளியே யார் என்பதைப் பொறுத்திருந்து அறிந்து கொள்ளலாம். முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி 700 ஓட்டங்களைக் குவிக்குமா? வெற்றியைப் பதிவு செய்யுமா? இன்றைய மூன்றாம் நாள் அதற்கு விடை கூறும். 
குறிச்சொற்கள்: #INDvsWI #INDvsWIN #BCCI #CWI #ICC #India #Windies #WestIndies #CricketScores #TamilCricket #ViratKohli #MegaIcons #PaytmTestSeries #CWC19 #TestCricket #SigaramNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account