சிகரம்

கண்ணப்பநாயனார்

பதிவர் : கவின்மொழிவர்மன் on 2018-06-23 16:07:34


வேடுவனவனும் வனத்தின் நடுவேயருகனை கண்டனன்,
நாடியமனதால் தன்னிலைமறந் தயர்ந்தே நின்றனன்,
சூட்டினன்காட்டு மலர்களைக்கொய்து வாய்நீரா லிறையைக்கழுவி,
காட்டுவிலங்கின் மாமிசமதனைத் திருவமுதாய் படைத்தனன்!

நாளும்பொழுதும் தன்னையே மறந்திறையை துதித்தனன்,
இறையினடியில் இறைச்சியைக் கண்டேவேதியன் கலங்கினன்,
வேடுவன்செயலை வேதியன் தினமும்கண்டே தவித்தனன்,
பாதகம்புரிபவன் யாரென்றறிந்திட புழுவாய் துடித்தனன்!

வேதியர்கனவி லருள்முனிவரைப் போலேயிறையைக் கண்டனர்,
மின்திகழுஞ் சடைமவுலி எழுந்தருள் செய்தனர்,
வேடுவனென்று வேற்றவனை நீநினைந்து வருந்துவையோ,
நன்றனவன் செயல்தனை நானுரைப்பக் கேள்என்று!

திண்ணனவன் நெஞ்செலாம் நம்பக்கல் அன்பென்றும்,
திருமனதில் எனையிருத்தி எமையறியும் அறிவென்றும்,
நின்னுமவன் செயலெலாம் எமக்கினிய வாமென்றும்,
அவன்நிலை இதுவென அறிநீயென் றருளுரைத்தார்!

பொழுதும்புலர்ந்திட வேதியர்மரத் தின்மறைவி லொதுங்கிட,
வேடுவன்வந்தே வாய்நீரூற்றி நறுமலர் சொறிந்தே,
இறைச்சியை படைத்தே எடுத்திட வேண்டினன்,
மரத்தின்பின்னே வேதியரஞ்சியே வியந்தே கண்டனன்!

இறையின் ஒருவிழி செந்நீர்வடிய வேடுவனுடனே,
பச்சிலையூற்றி குருதியை நிறுத்திட முயன்றிட,
தொடர்ந்தே வழிந்திடும் செந்நீர்கண்டே யஞ்சிட,
தன்விழியதனை யம்பில்பெயர்த்து சிலையில் பதித்தனன்!

செந்நீர் நிற்கவே வேடுவன் மலர்ந்தனன்,
சிலையின் மறுவிழி குருதியை சொரிந்திட,
வேடுவனுடனே பதறியும் அரண்டே அலறினன்,
குருதியை தடுக்கவே மார்க்கம் தேடினன்!

ஒருகால் தூக்கியிறையின் விழியில் பதித்தே,
மறுவிழியதனை யம்பால் பெயர்த்திட துணிந்தனன்,
அந்நொடி யிறையின் அசரீரி யொலிக்க,
தடுத்திடவேண்டி கண்ணப்பாவென்றே அருகனும் அழைத்தனர்!

இறையினருளால் இருவிழி மலர்களும் கிடைத்திட,
அன்பின் மிகுதியால் கண்ணப்பர் பணிந்திட,
கண்ணப்ப நாயனாரென்றே இறையும் அழைத்திட,
வேடுவர் உயர்ந்தார் நாயன்மார் வரிசையில்!

#கவின்மொழிவர்மன்


#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம் 

குறிச்சொற்கள்: #பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #ப
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account