சிகரம்

இருள் - சிறுகதை

பதிவர் : பிரமிளா பிரதீபன் on 2018-06-23 00:43:23

இருளிற்கும் காமத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா என்ன....?


இருளுடனான பிரயாணங்கள் இப்போதெல்லாம் சாத்தியப்படுவதே இல்லை. முகத்தில் தொடங்கும் பார்வை படர்ந்து பரவி எங்கெல்லாமோ நிலைக்குத்தி நிற்கின்றது. உடலை மறைக்கத் திமிறும் உடையை ஊடுருவி அதிவேகமாய் பிரயாணிக்கும் விரச பார்வைகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கின்றது.


இந்த ஆண்கள் நிஜமாகவே போதையுடன்தான் பிரயாணிக்கிறார்களோ....!


பின் எப்படி இத்தனை அருவருப்பை நான் பிரதிபலித்த பின்னும் இடைவிடாமல் பார்வைகளால் ஸ்பரிசிக்க முடிகிறது...?


எத்தனை முறைதான் முறைப்பது... எத்தனை முறைதான் சேலையை சரிசெய்வது...


என்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் பேருந்திற்குள் இருக்கிறோம். அவளும் இதே அவஸ்த்தையுடன் தலைகுனிந்தபடி நின்றுகொண்டிருப்பதாய் தோன்றுகிறது.


நாங்கள் இருவரும் தனித்து தெரிவதால் இந்த பார்வை மொய்ப்புகளா...? அல்லது இருளின் அடர்த்தி இவர்களுக்கு காம உணர்வை அள்ளி அப்பியுள்ளதா....?


பேருந்து விரைந்து கொண்டிருக்கிறது. ஒருவன் என் கழுத்துடன் கீழிறங்கி மார்பு பகுதிக்குள் தன் பார்வையை நிறுத்திக்கொண்டான். நான் நின்றபடி பிரயாணிப்பதால், அருகில் அமர்ந்திருந்த ஒரு கிழவன் இடையில் தெரியும் சிறு இடைவெளியை விடாமல் அவதானிக்கிறான். பக்கம் நிற்கும் தடித்த ஒருவன் காற்றில் பறக்கும் என் கேச ஸ்பரிசத்தை கண்மூடி அனுபவிக்கிறான்.
நான் பார்வைகளால் கற்பழிக்கப்படுகின்றேன். பலரது விரச பார்வைகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன்.


எத்தனையோ பகற் பொழுதுகளை பேருந்து பிரயாணத்தில் கழித்ததுண்டு. இத்தகையதொரு அவஸ்த்தையை வெளிச்சம் எனக்கு உணர்த்தியதேயில்லை.


இப்போதைய என் சந்தேகமெல்லாம் இந்த இருளின் மீதானது அல்லது இருளுக்குள் கசியும் நிலவினதும், மின்விளக்கினதும் ஒளியின் மீதானது.


பலரது அந்தரங்கம் இருளுக்குள்தான் வெளிப்படுகிறது.... உலகின் பாதி அசிங்கங்கள் இருளுக்குள்தான் அரங்கேறுகின்றன.


இருள் ஒரு கறுப்பு அரக்கன். ஆண்களுக்கு சாதகமானவன். காம உணர்ச்சியை அதிகரிக்கத் துடிப்பவன். போதையுடனான மானிடர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு குதூகலிப்பவன்.


இன்னும் சிறிது தூரத்தில் நான் இறங்க வேண்டும். பேருந்தின் சரி மத்தியில் நான் நின்று கொண்டிருப்பதால், ஏதோ ஒரு பக்கம் நடந்தே நகர வேண்டிய கட்டாயம். அது பின் கதவு வழியாகவெனின், இத்தனை நேரம் ஒரு பக்கவாட்டில் என்னை மொய்த்த கண்களுக்கு என் மொத்த உருவத்தையும் பார்வையால் அள்ளி விழுங்கும் வாய்ப்பை தந்ததாகிவிடும். முன் கதவெனின் என் பின்புற அசைவு வெறித்து நோக்கப்படும்.


இரண்டிலுமே எனக்கு உடன்பாடில்லை. யன்னல்வழி தாவி குதித்திட இயலுமென்றால் இந்நேரம் குதித்து ஓடியிருக்கலாம்.


இந்த ஒவ்வொரு பார்வையினதும் உள்ளக கற்பனை எந்த எல்லையை தொட்டு மீள்கிறதென்று எங்கனம் நானறிவேன்...?


இதோ நான் இறங்கும் தருணம் வந்தாயிற்று. எந்த சணடாளன் முகத்திலும் விழிக்கும் திராணி என்னிடத்தில் இல்லை. முன் கதவுவழி இறங்குவதற்காய் மெதுவாய் நடக்கிறேன்.


சடாரென்ற பஸ்நிறுத்தம் ஒருதடவை என்னை குலுக்கி எடுக்கின்றது. தடுமாறி போனவளாய் பதட்டத்துடன் இறங்கிக் கொள்கிறேன்.


இத்தனை நேரம் பலரது பார்வைகளை சுமந்து கொண்டிருந்த என்னுடல் சற்றே ஆசுவாசிக்கிறது. துணித்துண்டொன்றோ தும்போ கொண்டு தேய்த்துத்தேய்த்து.... துடைத்து....... அத்தனை பார்வையெச்சங்களையும் கழுவிக்கொள்ள வேண்டும்.


என்னதான் கழுவித் துடைத்து என்னை தூய்மையாக்கிக் கொண்டாலும், ஒவ்வொரு இருள் பொழுதுடனான பிரயாணத்திலும் பலரது கற்பனையில் நான் கற்பழிக்கப்படுகிறேன் என்பது நிஜம்தானே.....!


நினைக்க... நினைக்க... கோபத்தின் பரவல் என்னை முழுதாய் ஆட்கொள்கிறது. என் கோபத்தின் மொத்த பங்கும் சடாரென இருளின் மீது திரும்புகிறது.


பாதையில் கிடந்த ஒரு கல்லை பொறுக்கி ஆவேசத்துடன் என் முன்னால் தெரியும் இருளின் மீது ஓங்கி வீசுகிறேன். இருளின் கறுத்த உடலை கிழித்துக்கொண்டு அந்த கல் வேகமாக உட்செல்கின்றது.


--------------------------------------------------------------------#சிறுகதை #இருள் #பிரமிளாபிரதீபன் #பேஸ்புக் #தமிழ் #கற்பு #பெண் #உலகம் #பயணம் #ShortStory #PramilaPradeepan #FaceBook #Tamil #Girl #World #Travel #SIGARAMCO #சிகரம் 


குறிச்சொற்கள்: #சிறுகதை #இருள் #பிரமிளாபிரதீபன் #பேஸ்புக் #தமிழ் #கற்பு #பெண் #உலகம் #பயணம் #Shor
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account