சிகரம்

என்னோடு நான்

பதிவர் : சிகரம் பாரதி on 2018-03-11 00:29:28

பயணங்கள் எப்போதுமே அழகானவை. அதிலும் இரயில் பயணம் என்றால் சொல்லவும் வேண்டுமா? தை மாதத்தின் ஞாயிறு மாலைப் பொழுதொன்றில் என்னைத் தேடிப் பயணப்பட்ட போது சில நிமிட இரயில் பயணம் பல வருட வாழ்க்கையின் சாராம்சத்தை உணர்த்தி நின்றது. என்னை நானே உணர்ந்து கொண்டேன். என்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு எனக்குத் தேவைப்படுவதெல்லாம் இடைவிடாத தேடலும் அயராத உழைப்பும் விடா முயற்சியும் மட்டும் தான் என்பதை என்னை நான் தேடிய கணங்களில் உணர்ந்து கொண்டேன்.


கொஞ்சம் நடை, கொஞ்சம் தேநீர் மற்றும் கொஞ்சம் பயணம் என என்னை நான் தேடிக் கொண்டிருந்தேன். தொலைந்து போன என்னைப் பற்றிய சில குறிப்புகள் அங்கே கிடைக்கப் பெற்றன. அதில் எனக்கென்று நான் சுயமாக எந்தவொரு உறவையும் தேடிவைத்துக் கொள்ளவில்லை என்றொரு குறிப்பு. தூரத்தில் உள்ள உறவுகளை அருகாமையில் கொண்டு வந்து தந்த இணையம் அருகில் உள்ள உறவுகளை நெருக்கமாக்க மறந்து போய் விட்டது. இல்லை... இல்லை... என்னை மறக்க வைத்து விட்டது.
கடந்த காலத்தின் வலிகளும் எதிர்காலத்தின் சுமைகளும் நிகழ்காலத்தை இருளடையச் செய்து வைத்திருக்கின்றன. பகல் பொழுதிலும் அந்தகார இருள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. இருளில் இருந்து விடுபடுவதற்கான போராட்டம் தினசரி நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.


எனக்கென ஒரு தூரநோக்கையும் அதை அடைய சில இலட்சியப் பாதைகளையும் வகுத்துக் கொண்டேன். ஆனால் அதை அடைய நீ எடுத்துக்கொண்ட முயற்சி எத்தகையது என்பதை நீ எண்ணிப்பார் என என்னைப் பற்றிய குறிப்புகள் என்னை வினாவின. உண்மை தான். எனக்கான தூர நோக்கை அடைய நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகச் சொற்பம் தான்.


என்னைப் பற்றிய குறிப்புகளில் எதிர்மறையான குறிப்புகளே அதிகம். அவற்றைச் சரி செய்வது எப்படி என்று அனுதினமும் என் நாட்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். என் வழியெல்லாம் இருள் சூழ்ந்து பனி படர்ந்த வண்ணமாய் இருக்கிறது. கைவிளக்கொன்றைப் பிடித்தபடி எனக்கான பாதையைத் தேடி பயணித்துக்கொண்டிருக்கிறேன்.


தனிமையான பொழுதொன்றில் சுற்றிலும் இயற்கை துணையிருக்க மழைத்தூறலுடன் தேநீர்க் கோப்பை ஒன்று போதும் நம்மோடு நாமே உறவாட. ஒவ்வொரு துளித் தேநீரும் உதடு வழி தொண்டைக்குழி நனைத்து இரைப்பையைச் சென்றடையும் போது அதன் சுகமே தனிதான். ஒவ்வொரு துளியும் இரைப்பையைச் சென்றடையும் போது ஏற்படும் உணர்வுகள் வித்தியாசமானவை. அந்த மணித்துளிகள் சேமித்து வைக்கப்பட வேண்டியவை. அப்போது எனக்கான புதிய குறிப்புகளை நான் எழுதிக்கொள்ள வேண்டும்.


எனது இலட்சியத்தை அடைவதற்கு எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மிகச் சொற்பம். அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிலும் மிகச் சொற்பம். கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவ விட்டு ஏங்கிய நேரங்கள் அனேகம்.


இனி வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய காலம். எதிர்காலத்தை நோக்கி உறுதியாக அடியெடுத்து வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தெளிவான பாதையை வகுத்துக் கொண்டு பயணிக்க வேண்டிய நேரமிது. இறந்த காலமோ எதிர் காலமோ நம் கையிலில்லை. நிகழ்காலத்தை சரியான திட்டமிடலுடன் எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த வேண்டும்.


காலத்தோடு கைகோர்த்து பயணிக்கப் போகும் ஒவ்வொரு தருணமும் மிகச் சவாலானதாகவே இருக்கும். 

 

#077/2018

என்னோடு நான்

பதிவர் : சிகரம் பாரதி

#சிகரம்பாரதி #என்னோடுநான் #வாழ்க்கை #sigarambharathi #life #MewithMe #SIGARAM #SIGARAMCO #sigarambharathilk  

#சிகரம்   

 

குறிச்சொற்கள்: #சிகரம்பாரதி #என்னோடுநான் #வாழ்க்கை #sigarambharathi #life #MewithMe #SIGARAM #SIGARAMCO #sigarambharathilk
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account