சிகரம்

பங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி!

பதிவர் : சிகரம் on 2018-02-11 10:34:51

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்னும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.சிட்டகொங்கில் இடம்பெற்ற முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதலாவது போட்டி முழுக்க துடுப்பாட்டத்திற்கு அதிக சாதகத்தன்மையை வழங்கியிருந்த நிலையில் மைதானம் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி டாக்காவில் இடம்பெற்றது.


பிப்ரவரி 08 ஆம் திகதி துவங்கிய போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்தது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பங்களாதேஷுக்கு விஜயம் செய்து தொடரொன்றைக் கைப்பற்றிய முதலாவது அணியாக இலங்கை அணி தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் செய்து தொடரொன்றைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா,  தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் தோல்வி கண்டிருந்தன.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் இலங்கை அணி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 65.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. குசல் மெண்டிஸ் 68, ரொஷேன் சில்வா 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அப்துல் ரசாக் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 45.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. மெஹெந்தி ஹாசன் 38, லித்தோன் தாஸ் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்செய தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


பங்களாதேஷ் அணி குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தாலும் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவ்வணிக்கு வழங்காமல் தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 73.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ரொஷேன் சில்வா 70, திமுத் கருணாரத்ன 32, தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். தைஜூல் இஸ்லாம் 04 விக்கெட்டுகளையும் முஸ்தபிக் ரஹ்மான் 03 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டனர்.


338 என்னும் இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 29.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுக்குள் சுருண்டது. மொமினுல் ஹக் 33, முஷ்பிகுர் ரஹீம் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அகில தனஞ்செய 05 விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் 04 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக் கொண்டனர். 

 

இதன் அடிப்படையில் இலங்கை அணி 215 ஓட்டங்களால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றிக் கொண்டது. கிரிக்கெட் உலகின் 2296வது போட்டியான இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் ரொஷேன் சில்வா தனதாக்கிக் கொண்டார். இப்போட்டியில் மொத்தமாக 08 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அகில தனஞ்சய தனது டெஸ்ட் அறிமுகத்தை இப்போட்டியில் பெற்றுக்கொண்டார். 

 

2017 ஆம் ஆண்டு அதிகமான தோல்விகளைச் சந்தித்து விமர்சனங்களுக்குள்ளாகி வந்த இலங்கை அணி இவ்வருட ஆரம்பம் முதல் வெற்றிகளைப் பெற்று வருகிறது. இலங்கை அணிக்கு சிகரம் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள். அடுத்ததாக பிப்ரவரி 15 மற்றும் 18 ஆம் திகதிகளில் இருபது-20 போட்டிகள் இடம்பெறக் காத்திருக்கின்றன. பங்களாதேஷ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுமா? அல்லது இதிலும் வெற்றி பெற்று இலங்கை அணி சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

 

#சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS  

குறிச்சொற்கள்: #சிகரம் #சிகரம்விளையாட்டு #கிரிக்கெட் #BANvSL #BANvsSL #SIGARAMSPORTS #CRICKET #SIGARAMNEWS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account