தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!

பதிவர் : சிகரம் on 2018-01-14 16:01:14

வணக்கம் நண்பர்களே! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் சிகரம் இணையத்தளம் பெரு மகிழ்வு கொள்கிறது. இந்நன்னாளில் வாழ்வில் வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ மனதார வாழ்த்துகிறோம்.

தீமைகள் அகன்று நன்மைகள் பெருகிடட்டும். தடைகள் அகன்று நினைத்த காரியங்கள் நிறைவேறட்டும். மனக்குழப்பங்களும் கவலைகளும் நீங்கி தெளிவு பிறக்கட்டும். புதிய எண்ணங்கள் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இப்புத்தாண்டில் நாம் அனைவரும் தமிழுக்காய் ஒரு சபதம் ஏற்போம். "நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்" என்பதே இந்த ஆண்டுக்காக நாம் ஏற்கவேண்டிய சபதம். இது என்ன புதிதாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? புதிதாக எதுவும் இல்லை. நாம் அறிந்த ஒன்று தான்.

நம் சபதத்தின் முதல் வாசகம் "நமக்காக தமிழ்". இரண்டாவது வாசகம் "தமிழுக்காக நாம்". இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. நமக்காகத்தான் மொழி உருவானது. நாம் தான் மொழியை உருவாக்கினோம். சக மனிதனுடன் உரையாட, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள மற்றும் நமது அறிவை நிகழ்கால மற்றும் எதிர்கால சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ள, சேமித்து வைக்க மொழி அவசியமாகிறது. ஆகவே நம் தேவைகளை எல்லாம் நம் தாய் மொழியினூடாக நிறைவேற்றும் போது மொழி வளப்படும்.

நமது தேவைக்காக நாம் உருவாக்கிய மொழியை நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்பதே பதில். சக தமிழரோடு உரையாடும் போது தமிழிலேயே உரையாட வேண்டும். பிற மொழியினரோடு உரையாடும்போது தேவையேற்படின் அவரது மொழியில் உரையாடுவதுடன் அம்மொழியின் சிறப்புகளை தமிழில் அளித்தல் வேண்டும். தமிழறிந்த பிற மொழியினரோடு உரையாடும் போது தமிழில் உரையாடுவதுடன் தமிழ் மொழியின் சிறப்புகளை அம்மொழியில் அளிப்பதும் அவசியமாகிறது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறும் போது மொழி சீரான பாதையில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்.

நமக்காக நாம் உருவாக்கிய மொழியை நாம் தான் காக்க வேண்டும், வளர்க்க வேண்டும், வளப்படுத்த வேண்டும்! ஆகவே இன்று முதல் இச்சபதத்தை ஏற்போமாக!

நமக்காக தமிழ்; தமிழுக்காக நாம்!

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்!

 

தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள் - சிகரம் 

 குறிச்சொற்கள்: #தைப்பொங்கல் #தமிழ்ப்புத்தாண்டு
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account