சிகரம்

சங்ககால சிறுகதை - நீ நீப்பின் வாழாதாள்

பதிவர் : சாலையக்குறிச்சி வெற்றிவேல் on 2018-01-07 17:46:40

அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன். அந்த மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க அவனது முகத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் ஒரு சேர கலந்திருந்தது. வெகு நேரம் செயலின்றி அமர்ந்திருந்தான் செழியன். அவனது நிலையைப் பார்த்த அவனது நண்பன் துரை, “டேய்... என்னடா ஆச்சி உனக்கு? ஏன் இப்படி உக்காந்துருக்க?” எனக் கேட்டபடியே கணினித் திரையில் தோன்றியிருந்த மின்னஞ்சலைக் கவனித்தான்.


அதைப் படிக்கப் படிக்க துரையின் முகத்தில் வியப்பு பெருகியது. மகிழ்ச்சிப் பெருக்கில், “டேய்... மச்சான். வாழ்த்துக்கள் டா. எதிர்பார்த்துக்கிட்டிருந்த விசா கடைசில வந்தாச்சு. ரொம்ப மகிழ்ச்சி டா...” எனத் தெரிவித்தபடியே செழியனின் கையை இழுத்துக் குலுக்கினான்.


செழியன் பெயரளவிற்கு புன்னகையை வரவழைத்துக்கொண்டு அவனுடன் சேர்ந்து தனது கையைக் குலுக்கினான். செழியனின் முகத்தில் மகிழ்ச்சி துளியளவும் இல்லாததைக் கண்ட துரை, “டேய்... உனக்கு என்னா ஆச்சு? எதுக்கு இப்ப மூஞ்சிய இஞ்சித் தின்ன கொரங்கு மாதிரி வச்சிருக்க?” என வினவினான்.
“ஒன்னும் இல்லடா”


“இல்ல, ஏதோ இருக்கு?”


“அதான். ஒன்னும் இல்லன்னு சொன்னேன்ல...”


“என்னன்னு சொல்லப் போறியா இல்லியா?”


“அதான் ஏதும் இல்லேன்னு சொல்றேன்ல.....”


“ஒரு வருசத்துக்கு மேலே நீ முயற்சி செஞ்சி கெடச்சிருக்க வேல டா இது. அமேரிக்காவுக்குப் போறது தானே உனது கனவு? ஒரு வருசம் வேல செஞ்சா போதும். நீ இங்க செட்டில் ஆகிடலாம். இல்லன்னா அங்கேயே செட்டில் ஆகிடலாம்” எனத் தெரிவித்தவன் அத்துடன் இணைக்கப் பட்டிருந்த மேலும் சில கோப்புகளைக் கண்டு மகிழ்ச்சியுடன், “சம்பளமும் நல்ல சம்பளம் தானடா கொடுக்கறாங்க? நீ எதிர் பார்த்ததை விடவும் அதிகமாகத் தானே கெடச்சிருக்கு. எத நெனச்சியும் கவலைப் படாத. பறந்து போயிடு.”


செழியன் சிந்தித்த படியே, “அதுல போட்டுருக்க கண்டிஷன படிச்சிப் பாரு” எனத் தெரிவித்தான்.


“என்ன போட்டுருக்கானுங்க?” என வினவியபடியே மின்னஞ்சலை மேயத் தொடங்கினான் துரை.


“மூணு வருசம் கட்டாயமா அங்க வேலை பார்க்கணும்.”


“ஆமாம்.”


“இடைல ஊருக்கு வர முடியாது. கல்யாணம் செஞ்சிக்க கூடாது. மூணு வருசத்துக்கு அப்புறம் தான் எனக்கு லாங் லீவே கொடுப்பேன்னு சொல்லிருக்கானுங்க.”


“மூணு வருசம் தான்டா? அமெரிக்கன் பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு இருந்தாலே ஓடிப் போயிடும்.”


செழியன் ஆர்வமின்மையால், “இந்த வேல, என்னோட கனவு. ஆனா, இப்ப ஏனோ எனக்கு இந்த வேல சுத்தமா புடிக்கல” எனத் தெரிவித்தான்.


“எது செஞ்சாலும் யோசிச்சி முடிவெடு. என்னால அததான் சொல்ல முடியும்” எனத் தெரிவித்துவிட்டு அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றான் துரை. 


மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலே சிந்தித்தவன் தனது தொலைபேசியிலிருந்து தனது காதலியை அழைத்தான்.


“சொல்டா...”


“கயல், ப்ரீயா இருக்கியா?”


“நான் அய்யாவுக்கு எப்பவுமே ப்ரீ தான். என்ன விசயம்?”


“உன்ன உடனே பாக்கணும்.”


“டேய். காலைல தானடா பாத்த. அதுக்குள்ள என்னவாம்?” எனப் புன்னகையுடன் வினவினாள் அவள்.


“உடனே பாக்கணும் உன்னைய.”


“அவ்ளோ லவ்வாடா?”


செழியன், “நாம எப்பவும் சந்திக்கற பூங்காவுக்கு வந்துடு” எனத் தெரிவித்தபடியே அழைப்பைத் துண்டித்தான்.


அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் எப்பொழுதும் தன் காதலியைச் சந்திக்கும் பூங்காவை அடைந்தான் செழியன். அவனுக்கு முன்னரே அங்கு வந்திருந்த கயல் அவனுக்காகக் காத்திருந்தாள்.


“நீ போன்ல பேசுனதக் கேட்டதும் உடனே ஓடி வந்துடுவன்னு வந்தா எப்பவும் போல லேட்டு” எனத் தெரிவித்தபடியே செல்லமாக அவனது தலையில் கொட்டினாள் கயல்.


“இல்லடி, வழில கொஞ்சம் டிராபிக். அதனால தான் லேட்டு” எனத் தெரிவித்தபடியே பூங்காவில் கிடந்த கல்லில் அமர்ந்தவன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


“என்னடா, என்னோட முகத்த பார்த்துகிட்டு இருக்கறதுக்கு தான் என்ன வர சொன்னியா?”


“ஆமாம்டி. உன்னோட முகத்த பார்த்துகிட்டு இருந்தா எனக்கு காலம் போறதே தெரிய மாட்டங்குது” எனத் தெரிவிக்க அவள் நாணத்தில் தலை கவிழ்த்தாள்.


கயல் போன்று நீண்டு காணப்பட்ட கயலின் விழிகளைப் பார்த்தவன், “என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க” எனத் தெரிவித்தான்.


“இப்படி பொய் சொல்லியே என்ன கவுத்துடுடா பொருக்கி” என்றவள் அருகில் அமர்ந்திருந்த செழியனின் கன்னத்தை நறுக்கென்று கிள்ளினாள்.


“போடா பொருக்கி. எதுக்கு வரசொன்ன, சீக்கிரம் சொல்லு?”


“அப்படி என்ன அவரசம்?”


“அம்மா தேடுவாங்க.”


“என்ன பொய் சொல்லிட்டு வந்த?”


“அதெல்லாம் இப்போ உனக்கு எதுக்கு?”


செழியன் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு மின்னஞ்சலை அவளிடம் காட்டினான்.


“என்னடா இது?”


“நீயே பாரேன்.”


“என்னன்னுதான் சொல்லித் தொலையேன்” என்றபடியே மின்னஞ்சலை நோக்கினாள்.


அதைப் படிக்கப் படிக்க அவளது முகம் மாறியது. அதுவரை மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தவளின் முகம் சட்டென்று இருண்டது. விழியோரம் ஓரிரு துளி கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது.


“மூணு வருசமாடா?”


“ஆமாம்.”


“மூணு வருசம் உன்னைய நானு எப்படிடா பார்க்காம இருக்கறது?”


“எனக்கும் அந்தக் கவலை தான்.”


“ஆறு மாசம், ஒரு வருசம் கழிச்சி திரும்பி வந்துட்டு என்னைய கல்யாணம் செஞ்சி அழைச்சிக்கிட்டு போயிடுவன்னு பார்த்தா மூணு வருசம் கல்யாணமே செஞ்சிக்கக் கூடாதுன்னுல இந்த அக்ரிமென்ட் இருக்கு.”


“அப்டிதான் இருக்கு.”


“கல்யாணம் செஞ்சிக்கக் கூடாது, கொழந்த பெத்துக்க கூடாதுன்னு பொண்ணுங்களுக்கு தானடா கண்டிஷன் போடுவாங்க?”


“ஆமாம். இந்த விசித்திரமான கண்டிஷன் எனக்கும் புரியல. என்னோட ப்ராஜக்ட் அப்புடி. மூணு வருஷம் வேற எதப் பத்தியும் என்னால சிந்திக்க முடியாது. அதுக்கு தான் இந்த கண்டிஷன். நெறைய அலைய வேண்டி இருக்கும்.”


“புரியுது” எனத் தெரிவித்த கயல் அவனது தோளில் சாய்ந்துகொண்டாள்.


செழியன் அமைதியாக அமர்ந்திருந்தான்.


“நீ என்ன முடிவு எடுத்துருக்க?”


“நான் எந்த முடிவும் எடுக்கல. எதுனாலும் உன்கூட பேசிட்டு முடிவெடுத்துக்கலாம்னு தள்ளி போட்டுட்டேன்.”


“இந்த வேல உன்னோட கனவு தானே.”


“ஒரு காலத்துல.”


“இப்ப?”


“இப்போ என் கனவு என்னோட கயல் தான்.”


அவனது தோளில் சாய்ந்துகொண்டு அவள் குலுங்கிக் குலுங்கி அழலானாள். “உன்னோட கனவையே நீ எனக்காக விடப் போறியா?” என வினவினாள்.


“என்னோட எதிர்காலமே நீ தான். மத்ததுல்லாம் உனக்கு அப்புறம் தான்.”


“என் கூடவே இருந்துடு செழியன்.”


செழியன் அவளது கரத்தைப் பற்றியபடியே, “நான் உன்ன எப்பவும் விட்டுப் போயிட மாட்டேன். எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன்” எனத் தெரிவித்தான்.


“நீ நிதானமா யோசிச்சி முடிவெடு.”


“சரிடா.”


இருவருக்குள்ளும் நீண்ட அமைதி நிலவியது. அப்பொழுது கயல் தன் பையிலிருந்து ஒரு புத்தகத்தை வெளியே எடுத்தாள். அதைப் பார்த்த செழியன், “என்ன புத்தகம் அது?” என வினவினான்.


“நீ நீப்பின் வாழாதாள்...”


“புத்தகத்தோட பேரு அழகா இருக்கு.”


“ஆமாம், கலித்தொகை வரி.”


“எழுதுனது யாரு?”


“வெற்றிவேல். சின்ன சின்ன கதைகளோட அழகா இருக்கு. உனக்கு ரொம்ப புடிக்கும்னு தான் இத வாங்கிகிட்டு வந்தேன்.”


அவளது கன்னத்தைச் செல்லமாக கிள்ளியவன், “என் உம்மாக்குட்டி...” எனத் தெரிவித்தபடியே புத்தகத்தைப் புரட்டினான்.


“செழியன்...”


“என்ன?”


“ஒரு பைக் ரைட் போகலாமா?”


புத்தகத்தை மூடிய செழியன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, “போகலாமே!” எனத் தெரிவித்தான்.


இருவரும் அடுத்த அரைமணி நேரம் பைக்கில் சுற்றினார்கள். பிறகு கயலை அவளது வீட்டிற்கு அருகே விட்டான். அவள், “செழியன், நீ அமெரிக்கா போயில்லாம் எதுவும் சம்பாதிக்க தேவையில்லை. இங்க நீ சம்பாதிக்கறதே போதும் டா. அத வச்சே நான் நல்லா குடும்பத்த பாத்துப்பேன். நீ எப்பவும் என்கூட இருக்கணும். நெனச்சப்ப உன்ன பார்க்கணும். எப்பவாவுது கள்ள முத்தம். இதுகூட இல்லாம வாட்ஸ்அப், ஸ்கைப்னுலாம் என்னால வாழ முடியாது டா. நீ என்கூடவே இருக்கணும். எனக்கு அது போதும். ராத்திரி புல்லா யோசி. நாளைக்கு உன்னோட முடிவ சொல்லு. நீ எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சந்தோசம். நீ அமேரிக்கா போனாலும் உனக்காக நான் காத்திருப்பேன்” எனத் தெரிவித்தவள் நடந்து செல்லலானாள்.


அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த செழியன் தனது அறைக்குச் செல்லலானான். நெடு நேரம் சிந்தித்துப் பார்த்தவன் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கயல் அவனுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த "நீ நீப்பின் வாழாதாள்" புத்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டினான்.


அப்புத்தகம் சிறுகதைகளின் தொகுப்பு. அதுவும் சங்க கால இலக்கியங்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் நிறைந்திருந்த புத்தகம் அது. சங்க கால வாழ்வியல் சிறு சிறு கதைகளாக எழுதப்பட்டிருந்தது.

அச்சிறுகதைத் தொகுப்பில் முதல் சிறுகதையான "நீ நீப்பின் வாழாதாள்" எனும் கதையை வாசிக்கத் தொடங்கினான்.


                                                                     *****


தன் மடியில் அமர்ந்து தன் தோளில் சாய்ந்தபடி வானில் பூத்திருந்த விண்மீன் கூட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நற்செள்ளையுடன் சேர்ந்து வானையே நோக்கிக் கொண்டிருந்தான் பெருங்கடுங்கோ. காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்த நிலையில் காலத்தையும் கடந்து விண்மீன் கூட்டங்களினூடே பயணித்துக் கொண்டிருந்தார்கள்.


ஊருக்கு ஒதுக்குப் புறமாக காணப்பட்ட ஏரிக்கரையின் வேங்கை மரத்தடியில் இருவரும் அமர்ந்து களவுக் காதல் செய்துகொண்டிருந்தார்கள். குளிர்ந்த தென்றல் இதமாக வீசிக் கொண்டிருந்தது. தன் தோளில் சாய்ந்திருந்த தன் காதலியின் கூந்தலிலிருந்து மணம் எழுகிறதா அல்லது ஏரிக்கரையில் காணப்பட்ட தாழை மற்றும் தெறுழ்வீ புதரிலிருந்து இனிய நறுமணம் எழுகிறதா என்று குழம்பிய பெருங்கடுங்கோ விழிகளை மூடி தன் காதலியின் அருகாமையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

 

 

வானில் பூத்திருந்த விண்மீன் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நற்செள்ளையின் கன்னத்தை வருடியபடியே பெருங்கடுங்கோ, “நற்செள்ளை, இதற்கு மேல் காலம் தாழ்த்தினால் நாம் அகப்பட்டுக் கொள்வோம். புறப்படுவோமா? என வினவினான்.

 

அப்பொழுது தொலைவிலிருந்து எழுந்துகொண்டிருந்த வேலனின் வெறிப் பாடலைச் சுட்டிக்காட்டிய நற்செள்ளை, “கவலை வேண்டாம் தலைவரே. வேலன் கூத்து இன்னும் முடிவடையவில்லை. அதுவரை நாம் இங்கே தனிமையில் நேரத்தைக் கழிக்கலாம்” எனத் தெரிவித்தாள்.

 

“உன் நற்றாய் தேடினால் என்செய்வது?”

 

“என் தோழி அங்கே எனக்குப் பதில் இருக்கிறாள். அவள் எப்படிப்பட்ட சூழலையும் எளிதில் சமாளித்துக் கொள்வாள்.”

 

“உனது செவிலித் தாயின் மகளா?”

 

“ஆமாம், அவளே தான்.”

 

“சரி...” எனத் தெரிவித்தவன் அவளது கூந்தலை வருடத் தொடங்கினான்.

 

அப்பொழுது நற்செள்ளை, “இன்னும் எத்தனைக் காலம் இப்படி நாம் தனிமையில் சந்தித்து நேரத்தைக் கழிப்பது? விரைவில் மணமுடித்துக் கொள்வோம் ஐயனே!” என்றாள்.

 

“நாம் எப்பொழுது முதன் முதலில் சந்தித்தோமோ அப்பொழுதே நமக்குள் மணமாகிவிட்டது என்பதை நீ அறிவாய் தானே. ஊரார் கூட நாம் இணைந்தால் தான் நமக்குள் மணமாகிவிட்டது என்று அர்த்தமா? என் தலைவி நீ ஒருத்தி தான்.”

 

“தங்களை சந்தித்த வேளையிலேயே நானும் தங்களுக்கு மனைவியாகிவிட்டேன். ஆனால் ஊரார் முன்னிலையில் தாங்கள் கரம் எனது கரம் பற்றினால் நாம் இப்படி தனிமையில் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா?”

 

பெருங்கடுங்கோ அமைதியாக அமர்ந்திருந்தான். அப்பொழுது எழுந்த நற்செள்ளை திரும்பி அவனது மார்போடு தனது மாரழுந்த அணைத்துக் கொண்டவள், “ஊரார் சிலர் நம்மைப் பற்றி அலர் தூற்றத் தொடங்கிவிட்டார்கள். என் நற்றாய்க்கு என்று தெரிகிறதோ அன்று என்னைச் சிறைவைத்து விடுவாள். பிறகு தங்களை சந்திப்பது இயலாததாகிவிடும். அவள் அறிந்து நம்மைப் பிரிப்பதற்குள் தாங்கள் ஊரார் அறிய எனது கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். இல்லையேல், வாருங்கள் இருவரும் உடன்போக்கு மேற்கொண்டு விடலாம்” எனத் தெரிவித்தவளது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அவளது விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளி அவனது மார்பில் துளித் துளியாக விழுந்து நனைத்துக் கொண்டிருந்தது.

 

அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்ட பெருங்கடுங்கோ, “உன்னை மணந்து கொண்டு உன்னுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்கு மட்டும் இல்லையா என்ன? தகுந்த காலத்திற்காக காத்திருக்கிறேன் நற்செள்ளை” எனத் தெரிவித்தான்.

 

“தகுந்த காலம் என்றால், எனது நற்றாய் என்னை சிறை செய்த பிறகா?”

 

“இல்லை. எனது வறுமை அகலும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.”

 

“குடும்பத்தில் வறுமை சூழ்ந்திருந்தால் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாதா என்ன?”

 

“முடியும். ஆனால்...”

 

“இருப்பதை பகிர்ந்து இருவரும் வாழ்வோம் என் மன்னவா. பசியையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். தங்களுக்கு நான் இருக்கிறேன். எனக்குத் தாங்கள் இருக்கிறீர்கள். இருவருக்கும் நமது காதல் போதாதா. வாழ்நாள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கழிக்க.”

 

“நம் காதல் நமக்குப் போதும்தான். ஆனால்...”

 

“என்ன ஆனால்?”

 

“நீ செல்வச் செழிப்பில் வாழ்ந்த பெண் அல்லவா?”

 

“தங்களை விடவும் சிறந்த செல்வம் வேறு என்ன இருக்கப் போகிறது எனக்கு. தங்களுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி.”

 

“அதை நானும் அறிவேன். நாம் பசியையும், வறுமையையும் பகிர்ந்துகொண்டு வாழலாம். ஆனால், வறியவர்களையும் அப்படி அனுப்ப இயலாது அல்லவா?”

 

அதுவரை இருளில் அவனது மார்போடு தன் முகத்தை அழுத்திக்கொண்டு பேசிக் கொண்டிருந்த நற்செள்ளை எழுந்து அவனது முகத்தைப் பார்த்து, “என்ன கூறுகிறீர்கள்?” என வினவினாள்.

 

“இன்று மாலை வறியவர் ஒருவர் என் இல்லத் திண்ணையில் அமர்ந்து அன்னம் கேட்டார்” எனத் தெரிவித்த பெருங்கடுங்கோவின் குரல் கம்மியது. அவனால் மேற்கொண்டு பேச இயலவில்லை.

 

“என்ன நடந்தது தலைவரே?”

 

“அந்த வறியவருக்கு அளிக்கக் கூட வீட்டில் எதுவும் இல்லை. நல்ல வேளை தோட்டத்தில் பலா வெடித்திருந்தது. அதைக் கொண்டுவந்து அவரது பசியைப் போக்கி அனுப்பி வைத்தேன். என் நிலை நாளுக்கு நாள் தாழ்ந்துகொண்டே வருகிறது.”

 

“வறியவரின் பசியைப் போக்கும் அளவிற்காவது நமக்குச் செல்வம் வேண்டும் தலைவரே. நாம் பட்டினி கிடக்கலாம். ஆனால், விருந்தோம்பல் செய்யாமல் வறியவர்களை நாம் ஏமாற்றக் கூடாது.”

 

“ஆமாம். அதற்காகத் தான் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.”

 

“முடிவே எடுத்துவிட்டீர்களா?”

 

“எடுத்துவிட்டேன் நற்செள்ளை.”

 

“என்ன முடிவு?”

 

“வடக்கு நோக்கிப் பொருள் தேடிச் செல்லலாமா என்று சிந்திக்கிறேன்.”

 

“வடக்கு நோக்கியா?”

 

“ஆமாம்.”

 

“வடக்கே எங்கே?” என நற்செள்ளை வினவ பெருங்கடுங்கோ தொலைவில் தெரிந்த வடமீனைச் சுட்டிக் காட்டி, “அங்கு தான் செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தான்.

 

“அது எப்படிப்பட்ட நிலம், அங்கே எப்படிப்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை அறிந்துதானே முடிவெடுத்திருக்கிறீர்கள்?”

 

“விசாரித்துவிட்டேன் நற்செள்ளை. அவுணர்களை அழிக்க சிவன் முப்புரம் எனும் கோட்டைகளை அழித்தான். அந்தக் கோட்டைகளை எப்படி அழித்தான் என்பதை அறிவாய் தானே?” 

 

“அறிவேன் தலைவரே. முக்கண்ணன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து நெருப்பைக் கக்கினான். இடியும், மின்னலும் விழுந்து அழிவதைப்போன்று அக்கோட்டைகளின் மதில்களும், மாளிகைகளும் விழுந்து அழிந்தன.”

 

“ஆமாம், முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பு எப்படி வெளிவந்து தகிக்குமோ அப்படிப்பட்ட வெயில் சூழ்ந்த பாலையைக் கடந்து நான் செல்ல வேண்டும். அவனால் அழிக்கப்பட்ட மதில்களைப் போன்றே நான் கடந்து செல்லவிருக்கும் பாதையில் மலைகள் அனைத்தும் பிளந்து காணப்படும்.”

 

“கேட்கவே கொடூரமாக இருக்கிறது.”

 

“எனக்கு அந்தப் பாதையைக் கடப்பதைக் காட்டிலும் உன்னைப் பிரிவதை நினைத்தால் தான் எனக்கு கடினமாக இருக்கிறது.”

 

“......”

 

“உன்னை எப்படிப் பிரியப் போகிறேன் என்றுதான் எனக்குத் தெரிவியவில்லை” எனத் தெரிவித்தவன் தனது காதலியைத் தழுவினான்.

 

“தன்னிடம் எதுவும் இல்லை என்று நம்மைத் தேடி வருபவர்களிடம் கூறுவதைக் காட்டிலும் கொடுமையான துயரை நமது பிரிவு நமக்கு அளிக்காது தலைவரே. எத்தனைத் திங்கள் காலம் கடந்தாலும் நான் தங்களுக்காகக் காத்திருப்பேன். சென்று வேண்டிய பொருளுடன் திரும்பி வாருங்கள்” எனத் தெரிவித்தவள் தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழட்டி அவனிடம் கொடுத்து, “இது நல்ல விலைக்குச் செல்லும். கொற்கை முத்து இது. இதனைத் தங்களது பயணச் செலவிற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தவள், “எப்பொழுது புறப்படப் போகிறீர்கள்?” என வினவினாள்.

 

“வரும் மறைமதி அன்று.”

 

“நல்லது அதற்கு முன் மீண்டும் நாம் எப்பொழுது சந்திப்போம்?”

 

“தெரியவில்லை. நமது களவுக் காதலின் கடைசி சந்திப்பு இதுவாகத் தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

 

“சரி அத்தான். பத்திரமாகச் சென்று வாருங்கள். நான் தங்களுக்காக காத்திருப்பேன்” எனப் புன்னகையுடன் தெரிவித்தவள் அவனுக்கு முத்தமிட்டாள். 

 

அப்பொழுது அவர்களை நோக்கி நற்செள்ளையின் தோழி வரலானாள். நற்செள்ளையின் தோழி வந்ததும் பெருங்கடுங்கோ அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லலானான்.

 

பெருங்கடுங்கோ அவ்விடத்தை விட்டு நீங்கிச் சென்றதும் நற்செள்ளை அவளது மடியில் சாய்ந்துகொண்டு, “அவர் என்னைவிட்டுப் பிரிந்து பாலையைக் கடந்து பொருள் தேடச் செல்கிறாராம்” என ஓவென்று அழலானாள்.

 

அவளது அழுகையில் தோழியின் ஆடை முற்றிலும் நனைந்து போயிருந்தது. தோழி ஆறுதல் செய்து நற்செள்ளையை இல்லத்திற்கு அழைத்துச் செல்லலானாள்.

 

நற்செள்ளையை விட்டு நீங்கிய பெருங்கடுங்கோ தனது பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யலானான். காலம் வேகமாக கடந்து கொண்டிருந்தது. அவன் குறித்திருந்த மறைமதி தினமும் வந்தது. அப்பொழுது நற்செள்ளையின் தோழி அவனிடம் வந்தாள்.

 

வந்தவள், “வறியவருக்கு வேண்டியவற்றை அளிப்பது இல்லறக் கடமைதான் தலைவரே. ஆனால், தன் உயிருக்குயிரான காதலியைப் பிரிந்து பொருள் தேடிச் சென்றுதான் ஆக வேண்டுமா?” என வினவினாள்.

 

“நற்செள்ளை எப்படி இருக்கிறாள்?”

 

“அவள் உயிர் தங்களிடம் இருக்கையில், அவளால் அங்கு எப்படி இருக்க இயலும்?”

 

“நான் தவறான முடிவெடுத்து விட்டேனோ?”

 

“ஆமாம். வடமீனை விடவும் நிலையான கற்பினை உடையவள் நற்செள்ளை. செல்வத்தை விடவும் அவள் தங்களுக்கு முக்கியம். முதலில் அவளது கரத்தைப் பற்றுங்கள். தாங்கள் அவளைப் பிரிந்து சென்றால் அவள் நிச்சயம் இறந்துவிடுவாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தவள் வேகமாக அவ்விடத்தைவிட்டு நடக்கலானாள்.

 

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பெருங்கடுங்கோ அதற்கு மேல் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. நேராகத் தனது காதலியின் இல்லத்திற்குச் செல்லலானான். அங்கே அமர்ந்திருந்த நற்செள்ளையின் நற்றாய், செவிலித் தாய், தோழி, என எவரையும் பொருட்படுத்தாமல் நற்செள்ளையிடம், “என்னை நீங்கினால் நீ மட்டுமல்ல, உன்னை நீங்கினால் நானும் இறந்து போவேன்” எனத் தெரிவித்தான்.

 

கவலையுடன் எழுந்த நற்செள்ளை, “நீங்கள் பொருள் தேடி வடக்கே செல்லவில்லையா?” என வினவினாள்.

 

பெருங்கடுங்கோ, “எனது செல்வமே இங்கிருக்க வேறு எதைத்தேடி நான் செல்லப் போகிறேன்” எனத் தெரிவித்தான்.

 

நற்செள்ளை ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

 

                                                                  ************

 

நீ நீப்பின் வாழாதாள் சிறுகதையைப் படித்த செழியன் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். பொருள் தேடி நீண்ட தொலைவு செல்வதை விடவும் தன் காதலியின் அருகில் இருப்பதே சிறப்பு என்பதை அவன் அப்பொழுதே உணர்ந்தான்.

 

உடனே தனது காதலியை தொலை பேசியில் அழைத்தான்.

 

“சொல்லுடா...”

 

“உன்ன நான் பார்க்கணும்.”

 

“டேய். வீட்ல எல்லாரும் இருக்காங்க.”

 

“எனக்குத் தெரியாது.”

 

“சரி, கெளம்பி வா.”

 

“வந்து?”

 

“தோட்டத்துக்கு வா. அங்க யாரும் வர மாட்டாங்க.”

 

“ம்ம்ம்...” எனத் தெரிவித்தவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

அடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் அவள் தெரிவித்ததைப் போன்றே திருட்டுத் தனமாக சுவர் ஏறி கயல் வீட்டுத் தோட்டத்தை அடைந்திருந்தான்.

 

“நீ பண்றது வர வர சரி இல்ல. வர வர நெறையாதான் அதிகாரம் பண்ற.”

செழியன் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.

 

“எதுக்குடா பாக்கணும்னு சொன்ன?”

 

“நான் என்ன செய்யணும்னு முடிவெடுத்துட்டேன்.”

 

“என்ன முடிவு”

 

“முட்டாச் சிறப்பின்

பட்டினம் பெறினும்...

வாரிரும் கூந்தல்

வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய நெஞ்சே...” எனப் பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தெரிவித்த பாடலைப் பாடினான்.

 

அவன் பாடிய பாடலைக் கேட்டதும் ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் கயல்.


கலித்தொகை : பாடல் – 2.; பாடியவர்; பெருங்கடுங்கோ; திணை : பாலை.

 

சங்ககால சிறுகதை - நீ நீப்பின் வாழாதாள் - சிகரம் 

குறிச்சொற்கள்: #சாலையக்குறிச்சிவெற்றிவேல் #சிறுகதை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account