சிகரம்

இலக்கியத் தேடல் | அக நானூறு | பாலைத் திணை

பதிவர் : கிருத்திகா on 2017-11-15 15:21:06

சங்க காலத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளை சங்கப்பாடல்களில் காண நேர்கிறது. அவ்வகையில் இன்று சங்க இலக்கிய தேடலில் என் மனம் கவர்ந்த ஒரு பாடலும் அதன் விளக்கமும் இங்கே தந்துள்ளேன்.

அகநானூறு பாடல் எண் #21

திணை : பாலைத்திணை

பாடியவர் : காவன் முல்லைப் பூதனார்
  
மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல்,
அம் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணை தோள்,

மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்!
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம்! வல்லே
எழு இனி வாழி என் நெஞ்சே!தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். அவ்வாறு செல்லும் தலைவன் பாதிவழியில் மனக்குழப்பத்துக்கு ஆளாகிறான். இதனை அவனது மனதுக்கும் நெஞ்சுக்கும் நடைபெறும் போராட்டமாகச் சித்திரிக்கிறார் புலவர்.

தலைவன் தலைவியுடன் இனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அச்சமயம்  தலைவனுக்கு மேலும் பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. உணர்வுகளின் பிறப்பிடமாகிய நெஞ்சு, "நல்ல உணவு, சிறந்த உடை, வீடு நிறைய அலங்காரப் பொருள்கள், கூடுதல் வசதிகள் என்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றால் குடும்ப வாழ்வு மேலும்  பொலிவுபெற்றுத் திகழும்" என்று  தலைவனை ஆசைக்காட்டி  தூண்டுகிறது.

ஆனால், தலைவியை இதற்காகப் பிரிந்து சென்றால் அவள் பிரிவுத்துயரால் ஆட்கொள்ளப்பட்டு தனது பொலிவை இழந்துவிடுவாளே என தலைவன் தவிக்கிறான். தலைவனின் இந்த தவிப்பை புலவர் பின்வருமாறு விளக்குகிறார்.

தலைவியின் முல்லைப்பூ போன்ற பற்கள் தம் முறுவலை இழக்குமே?

அழகிய வயிறு சரியாக உணவருந்தாமல் ஒட்டிப்போய்விடுமே?

பெரிய பின்புறம் வாட்டத்தினால் சிறுத்துப்போய்விடுமே? 

பின்னலுற்று நீண்டு தாழ்ந்திருக்கும் கூந்தல் பேணப்படாமல் பரட்டையாய்ப் போய்விடுமே?

உருண்டு திரண்ட மென்மையான மூங்கில் போன்ற தோள்கள் உருமாறிப்போய்விடுமே?

எனவே தொலைதூரத்துக்கு அவளை விட்டுப் பிரியவேண்டாம்  என்று தலைவனின் மனம் வாதாடிப் பார்க்கிறது.

நெடுநேரம் வாதாடியும் நெஞ்சம் கேட்கவில்லை. காதலை பணம் வெல்கிறது. எனவே தலைவன் பொருளீட்டப் பிரிந்து செல்கிறான்.

பாதி வழியில், அதுவும் பாலைநிலத்து நட்ட நடுக்காட்டில், நெஞ்சம் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறது. தலைவியின் காதலை எண்ணி துன்பம் கொண்டு, இனிமேல் ஒரு எட்டுக்கூட எடுத்துவைக்க முடியாது என்று அங்கேயே அமர்ந்துவிடுகிறது.

வம்படியாக அதன் கையைப் பிடித்துத் தூக்க முயல்கிறது மனம்.

“எழுந்திரு, நல்ல பிள்ளையல்லவா!” என்று தாங்குகிறான் தலைவன்.

“நீ சொன்னவாறே, வீடு பொலிவுபெற, பலவித செல்வங்களையும் ஈட்டி வருவோம். சீக்கிரம் வா!" என்று தலைவன் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது.

மனித மனதின் ஆசைகளையும், காதலும், செல்வமும் மாறி மாறி மனிதனை ஆட்டுவிக்கும் தன்மையையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.

இன்றல்ல நேற்றல்ல... சங்க காலம் முதலே மனிதனை இத்தன்மைகள் பாடாய்படுத்திக் கொண்டிருப்பதை இப்பாடல் வாயிலாக அறியமுடிகிறது.

நன்றி -
பௌசியா (முகநூல் பதிவு)

பேஸ்புக்கில் பௌசியா என்பவர் எழுதி வெளியான இப்பதிவை கிருத்திகா நமக்காக தொகுத்தளித்துள்ளார்.

குறிச்சொற்கள்: #TAMIL
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

kumaar

2017-11-19 03:47:23

very nice sago

Fowzia Iqbal

2017-11-16 08:18:24

சங்க இலக்கிய பதிவை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி கிருத்திகா

Create AccountLog In Your Account