சிகரம்

மச்சமளவு முத்தம்

பதிவர் : கோபால் கண்ணன் on 2017-11-01 07:44:06

பறவையின் வாழ்வைப் பழகு
விடியலில் விரைந்தெழு
கதிரோனைக் காவல் வை
இறையைத் தொழு
திசையை தீர்மானம் செய்
செல்லும் இடத்தை
இல்லத்தில் சொல்

இரைதேடி பற ; சேகரி
இருள் வருவதற்குள்
இல்லம் திரும்பு
காலணிகளையும் பொய்களையும்
வீட்டிற்கு வெளியில் விடு
ஒளித்திரைகளை அணை
மக்களுடன் விளையாடு
அடுக்களையில் உதவிசெய்
கூடியமர்ந்து உண்டு களி
குழந்தைகளை உறங்க வைஉன் அறையை அலங்கரி
அன்புருக்கியை அழை
இடை தழுவு
விடுவிடு என இடைமறிப்பாள்
இயல்புதான்
இழுத்தணைத்து இறுக்கு

விரல்வெளிகளை
விரல்கள் செருகி நிரப்பு
அவளின் இடக்கை ரேகைகளை
உன் வலக்கை ரேகைகளால் போர்த்து
உன் துயரென்ன என பரிவுடன் வினவு
இறக்கி வை எனச்சொல்லி
உன் தோள்களைக் காட்டு
இளகும் குரலுக்குச் செவி கொடு
அக்கணம் அவளுக்குத் தந்தையாகு
தலை தடவு
உச்சந்தலையில் மச்சமளவு முத்தம் வை

உன் துயரையும் சொல்
அவள் உனக்குத் தாயாகியிருப்பாள்
மடி சாய்
மகிழ்ச்சி பழக்கு
கடல் குளித்து நீர்வழிய எழும் நிலவைப்போல்
உடை வழிய உடல் எழும் ; கண்டு ரசி
மிச்சம் வைத்திருக்கும் முத்தங்களை
தேகத்தில் ஒத்தடமிடு

ஒரேவித உணவு
நாவுக்குச் சலிப்பூட்டும்; புரிந்துகொள்
புதுப்புது உத்திகளில்
புணர்ச்சி விளக்கு
உடற்செல்கள் ஆழ்வுறக்கம் கேட்கும்
அனுமதி கொடு

குருவிகள் விடியலை அறிவிக்கும்
புதியநாள் அழைக்கிறது
புருவமத்தியில் முத்தமிட்டு
இணையை எழுப்பு
பறவையாகு
*
இக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.

குறிச்சொற்கள்: #கவிதை #கோபால் கண்ணன் #POEM #fb
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account