#உலக_பெண்_குழந்தைகள்_தினம் #InternationalDayoftheGirlChild

பதிவர் : சிகரம் on 2017-10-12 00:55:18

ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் காலமிது. பெண்கள் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகள் மீதான வன்முறை இன்னமும் குறையவில்லை. குறிப்பாக பாலியல் ரீதியான தாக்குதல்கள் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப் படுவது ஏற்றுக் கொள்ள முடியாததொன்று. பெண்கள் சிறுவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

அக்டோபர் 11 ஆம் திகதி உலக பெண் குழந்தைகள் தினம். உலக பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட இலங்கையில் வித்தியாவும் தமிழகத்தில் சுவாதியும் உயிரோடிருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களைப் போன்றவர்களை புதைகுழியில் தள்ளிவிட்டுத்தான் நாம் நினைவு தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் இன்னமும் மறுக்கப்படுகிற சூழலையே நாம் தற்போது காண்கிறோம். கல்வி உரிமை மறுக்கப்படுகின்றமை, இள வயது திருமணம், பாலியல் கொடுமைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களுக்கான அங்கீகாரமின்மை போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். பெண்களின் பருவ மாற்றங்களுக்கான அங்கீகாரமின்மை என்பது பெண்கள் பூப்படைந்த பின்னர் மாதவிடாய்க் காலத்தை மாதந்தோறும் எதிர்நோக்குகின்றனர். அதன் போது அவர்களை சக ஆசிரியைகளோ அல்லது சக சூழலில் இருக்கக்கூடிய மூத்த பெண்களோ கூட புரிந்து கொள்ளாமல் செயற்படும் கொடுமையான சூழலைக் குறிக்கிறது. 

ஆண்-பெண் சமத்துவம், அது இது என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. சக பெண் குழந்தைகளுடன் நாகரீகமாகப் பழக வேண்டும். 18 வயது வரை பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட திருமணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்களின் பருவ மாற்றங்களை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.நமது இல்லங்களிலும் ஒரு பெண்குழந்தை இருக்கலாம். சமூகத்தில் எங்கோ ஒரு பெண்குழந்தைக்கு நடக்கும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வாளாவிருந்தால் நாளை அது நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் நடக்கலாம். ஆகவே பெண் குழந்தைகளுக்கெதிரான சமூக அநீதி எங்கெல்லாம் இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நமது எதிர்ப்புக் குரலை உறுதியுடனும் வலிமையுடனும் பதிவு செய்வோம். பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண்குழந்தைகளை முன்னேற்றுவோம்!

#InternationalDayoftheGirlChild #உலகபெண்குழந்தைகள்தினம் 


குறிச்சொற்கள்: #உலக_பெண்_குழந்தைகள்_தினம் #InternationalDayoftheGirlChild
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account