மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை!

பதிவர் : சிகரம் on 2017-09-28 23:02:29

இலங்கை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் கடந்த 2015.05.13 அன்று பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின் செப்டெம்பர் 27இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கு மூன்று தமிழ் நீதிபதிகள் அடங்கிய குழுவினால் யாழ் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோரின் தலைமையிலான, ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால்,
செப்டெம்பர் 27இல் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (2வது சந்தேகநபர்), பூபாலசிங்கம் தவக்குமார் (3வது சந்தேகநபர்), மகாலிங்கம் சசிதரன் (4வது சந்தேகநபர்), தில்லை நாதன் சந்திரதாசன் (5வது சந்தேகநபர்), பெரியம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் (6வது சந்தேகநபர்), ஜெயநாதன் கோகிலன் (8வது சந்தேகநபர்) மற்றும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் (9வது சந்தேகநபர்) ஆகிய ஏழு பேருக்கும் மரண தண்டனை மற்றும் 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இருவர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  
அத்துடன் 2ம், 3ம், 5ம், 6ம் சந்தேகநபர்கள் வன்புணர்வு மற்றும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனவும், 2ம், 3ம், 4ம், 5ம், 6ம், 8ம், 9ம் சந்தேகநபர்கள் வன்புணர்வுடன் மட்டும் தொடர்புடையவர்கள் எனவும், நீதிபதி சசி மகேந்திரன் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் ஏழு பேரும் உயிரிழந்த மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா (பத்து இலட்சம்) நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
   
சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் காலம் கடந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குற்றவாளிகள் ஏழு பேருக்கும் உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு சவூதி அரேபியாவைப் போல் பொதுமக்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளின் மேன் முறையீடு நீதி தேவதையை தூக்கிலிடாமல் இருக்கட்டும். மாணவி வித்தியாவின் ஆன்மா சாந்தி அடைவதாக.

#VithyaCaseJudgement #Vithya #Rape #Murder #LK #SriLankaகுறிச்சொற்கள்: #VithyaCaseJudgement #Vithya #Rape #Murder #LK #SriLanka
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Babu

2017-09-29 13:58:47

Kadavul thunai..neethiye velum

Create AccountLog In Your Account