மரணம் என்பது என்ன?

பதிவர் : அருண் பிரசாத் on 2017-08-07 09:23:26

அறிவியலும் சரி, ஆன்மீகமும் சரி  இன்னும் விடை தெரியாமல் மண்டையை சொறியும் முக்கியமான ஒரு புதிர் மரணம். ஆமாம்... உண்மையில் மரணம் என்பதை மருத்துவம் எப்படித் தீர்மானிக்கிறது? நம்ம ராமசாமி போய்ட்டாரா? அப்டின்னு தீர்மானிப்பது எப்படி? அது கொஞ்சம் சிக்கல் தான். ஏன்? மரணம் என்பதற்கு மருத்துவத்தில் வரைவிலக்கணம் இல்லை... அதான். "சுவாசம் மற்றும் உணர்வுகளின் மீள முடியாத நிரந்தர இழப்பு மரணம்" என்று ஐக்கிய ராச்சியத்தில் மொட்டையாக ஒரு கூற்று உண்டு. ஆனால் பூரண விளக்கம் கிடையாது ("The irreversible loss of the capacity for consciousness, combined with irreversible loss of the capacity to breathe".)

ஒரு தேர்ந்த அனுபவம் மிக்க மருத்துவர் அதனை தீர்மானிப்பார். உடல் தன் செயற்பாடு இழப்பது மரணம். அதனை சில அறிகுறிகளை வைத்து அறிகின்றனர். அவை எவை எனத் தெரியுமா? 

வெளிறல் - ஆங்கிலத்தில் இதை Pallor என்பார்கள். உடம்பில் வழமையாக ரத்த ஓட்டம் கூடிய பகுதிகள் சிவப்பாக இருக்கும் . இறந்த பின்பு நமது இரத்த ஓட்டம் செயலிழந்து விடுவதால் அந்த இடங்கள் வெளிறிப் போய் விடும். நமது உடலில் வெப்பம் பரவ குருதியே காரணமாக இருப்பதால் உடல் சில்லிட்டுப் போய் விடும். அசைவற்ற தன்மை -  இது கொஞ்சம் நிச்சயம் இல்லாத விஷயம். இதை நம்பி அடக்கம் பண்ணப் பார்த்து பல கல்லறைகளில் உயிர்த்தெழுந்து ஓடினவர்கள் உண்டு. ஆனால் ஒருவரின் மரணத்தை தீர்மானிக்க கட்டாயம் அவரின் அசைவற்ற தன்மை நிரூபிக்கப் படவேண்டும். குறிப்பாக சுவாச அசைவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு அந்த அசைவு சில நிமிஷம் இல்லாது போகலாம். 

திறந்த கண்கள் - இது நமக்கு பரிச்சயமான ஒன்று. நம் தமிழ்ப் படங்களில் சாகும் நபர் இப்படித்தான் சாவார். ஆனால் இறந்த ஒருவர் கண்களை திறந்த படியே சாவார் என்று கட்டாயம் இல்லை. இந்நிலையில் கண்ணின் சுற்றயல் பகுதி கண்ணீர் முகிலால் சூழ்ந்து காணப் படலாம்..

நாடித் துடிப்பு ( Pulse ) இல்லாமல் போகும். வழமையாக கையில் பார்ப்பது நமக்கு பரிச்சயம். ஆனால் மருத்துவ ரீதியாக கழுத்தில் ( Carotid ) அதுவும் ஒரு நிமிடம் வரை பார்க்க வேண்டும். இது இல்லை என்றால்... அன்னாரின் பூதவுடல்...

இதயத் துடிப்பும் அதே ஒரு நிமிடம் சோதிக்கப் படும்.
சுவாச அசைவுகள் கிட்டத் தட்ட 3 நிமிடங்கள் அவதானிக்கப் படும்.

கண்ணின் மணி சோதிக்கப் படும். உங்கள் கண்ணை கண்ணாடி முன்பாக சென்று உன்னிப்பாக அவதானியுங்கள் . ஒரு டோர்ச் ஒளி (கை மின்விளக்கு) உங்கள் கண்ணில் படட்டும் . கண்மணி சுருங்கும் . இது ஆங்கிலத்தில் Corneal Reflex எனப்படும். இறந்த மனிதனுக்கு இதுவும் சோதிக்கப் படும்.

இவ்வளவும் பார்த்து முடிந்த பின்புதான் மரணத்தை முடிவு செய்வார்கள். (எவ்வளவு கஷ்டம்? ) இம்புட்டும் இல்லை என நூறு வீதம் முடிவு பண்ணி விட்டுதான் மருத்துவர் கண்ணாடியை கழற்றுவார்... "மன்னிச்சிருங்க... நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.... எல்லாத்துக்கும் சொல்லி அனுப்பிடுங்க..."

அப்படியும் ஏதாவது ஒரு விஷயம் நம்பிக்கை தருகிற பட்சம் "கடவுள் மேல் நம்பிக்கை வைங்க..." இதெல்லாம் சொல்கிறார்கள்... நீங்கள் அடிக்கும் மருத்துவர் நகைச்சுவை மாதிரி இல்லையாக்கும்....

//இக்கட்டுரை மருத்துவர் அருண்பிரசாத் அவர்களின் படைப்பாகும். மேலும் இப்படைப்பு அவரது வலைத்தளத்தில் 26.11.2012 அன்று வெளியானது. அவரது அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.//


குறிச்சொற்கள்: #ஆய்வுக் கட்டுரை
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account